Tuesday, August 2, 2011

இஸ்லாம் குறித்து எந்த முஸ்லிமும் எனக்கு சொல்லித் தரவில்லை


-பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)
                                                                                                       
"இறை மறுப்பாளர்கள் உண்மையில் இறைவனை மறுக்கவில்லை. இறைவனை அறியாமைதான் நாஸ்திகமாகும். மாற்றமாக இறைவனை நிராகரிக்க யாருக்கும் முடியாது" என்றார் பேராசிரியர் அப்துல்லாஹ்


தெமடகொட மஸ்ஜித் தவ்ஹீத் தஃவா குழுவினர் ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்வு கடந்த 27.06.2011 அன்று மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற் றும்போதே பேராசிரியர் அப்துல்லாஹ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தமிழகத்தின் சிறந்த மனநல நிபுணரான பேராசிரியர் அப்துல்லாஹ், இஸ்லாத்தை ஏற்க முன்னர் பெரியார்தாஸன் என்ற பெயரில் அறியப்பட்டவர்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தைத் தழுவியவர். தனது நாட்டிலும் வெளிநாடுகளிலும் இஸ்லாம் குறித்த உண்மையை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தி வருகிறார்.

‘நாஸ்திகத்திலிருந்து ஆஸ்திகத்திற்கு’ எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது: இன்று உலகம் இணைவைப்பில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் இன்னும் இறைவனை அறியாதிருக்கி றார்கள். இழிவான, கேவலமான விடயங்களைப் பேசும் நாவுகள் ஏன் இறைவனைப் பற்றிப் பேசாதிருக்கின்றன. இஸ்லாத்தை அறிந்தவர்கள், அறியாதவர்களுக்கு ஏன் எத்திவைக்கவில்லை என்றும் கேள்வியெழுப்பினார்.

16 வயது வரை முஸ்லிம்களின் வீட்டில் புரியாணி உண்டிருக்கிறேன். அவர்களின் அன்பையும் பரிமாறியிருக்கிறேன். அவர்கள் அல்குர்ஆனைக் கண்ணில் கூட காட்டியதில்லை. விஞ்ஞானி அப்துல் கலாம், கவிஞர் அப்துர் ரஹ்மான், அப்துஸ் ஸமத் போன்றோரோடு மிக நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். அப்துர் ரஹ்மானோடு கஸல் கவிதைகள் குறித்து இரவிரவாகப் பேசியிருக்கிறேன். ஆனால், இவர்கள் யாரும் இஸ்லாம் பற்றிச் சொல்லித் தரவேயில்லை. அல்குர்ஆனைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளவேயில்லை என்றும் வருத்தப்பட்டுக் கொண்டார்.

அத்தோடு தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க. கருணாநிதி உயிரோடிருந்து தானும் உயிரோடிருந்தால் இன்ஷா அல்லாஹ் கருணாநிதிக்கு இஸ்லாத்தை எத்தி வைத்து அவரை இஸ்லாத் தின்பால் அழைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Don't Forget Write Your Comments